திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனிடைய, கூடங்குளம் கடற்கரை பகுதியில் திடீரென லட்சக்கணக்கிலான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. மேலும், கரை ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றமும் வீசத் துவங்கியுள்ளது.
இது குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவைகள் விற்பனை ஆகாததால் கடலில் கொட்டப்பட்டுள்ளன. அந்த மீன்கள் கடற்கரை ஓரம் ஒதுங்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.