திருநெல்வேலி: பழைய பேட்டை சர்தார்புரம் கீழதெருவைச் சேர்ந்த ஜெசுராஜ் (26) தனியார் ஒப்பந்த அடிப்படையில் மின்சார வாரியத்தில் தெருவிளக்கு பழுதுபார்க்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில், தச்சநல்லூர் மங்களா குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை என புகார் வந்ததன் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்விளக்கு சரி பார்க்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்து கணேஷ் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஜேசுராஜின் உடலை மின்கம்பத்தில் இருந்து இறக்கி, ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உதவியோடு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், அவர் உயிரிழந்ததை உறுதிசெய்தனர்.
மேலும், இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் மின் விளக்கு சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.