நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குன்னூர் - கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் - ஐயப்பன் கோயில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த வாடகை கார் மீது மரம் விழுந்ததில், ஜாகிர் உசேன் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல, மேல் பாரத் நகர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்பில் மூதாட்டி ஒருவர் காயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், குன்னூர் பகுதியில் மழையின் தாக்கம் அதிகரித்ததால் மாணவர்களின் நலன் கருதி குன்னூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.