நீலகிரி: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த பொம்மன்(23) என்பவர் கடமான் இறைச்சி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கோத்தகிரியில் உள்ள மார்வாளா தனியார் எஸ்டேட் பகுதியில் கடமானை வேட்டையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர், பொம்மனை நீலகிரி கட்டுப்பாட்டு வனத்துறையிடம் சத்தியமங்கலம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுருக்கு கம்பி வைத்து கடமானை வேட்டையாடி, அதனை உறவினர்களுக்கு எடுத்துச் செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.
இதில், ஹாசனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(38), ஆட்டுக்குமார்(70), அழகன்(60), ஜடைசாமி(45), ஜடையப்பன்(47), ஜான் பிரகாஷ்(24), சந்தோஷ்(28), சின்னப்பன் (43), ஜார்ஜ்(41), மாதப்பன்(29), பசவன்(26), சடையப்பெருமாள்(40), மேஸ்திரி குமார்(44), எஸ்டேட் மேலாளர் சுனில் குமார்(49) ஆகிய 15 பேரை கைது செய்த வனத்துறையினர், கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.