கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த கீழையூர் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலையில், கோயிலின் முன் மற்றும் தரைப் பகுதியை சமன் செய்து கொண்டிருந்தபோது, பண்டைய கால கல்வெட்டு தூண்கள் தென்பட்டுள்ளன.
இவ்வாறாக கிடைக்கப்பட்ட 6 தூண்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டன. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜேந்திர சோழனால் இத்தகைய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அந்த கல்வெட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த திருவெண்ணெய்நல்லூர் மற்றும் குப்பம் உள்ளிட்ட ஊர்களின் பெயர்களும், தானமாக வழங்கப்பட்ட பொன் - பொருள் விவரங்களும் எழுதப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகே இந்த கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பது குறித்த முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.