சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. மருத்துவமனையில் அனுமதித்த தனியார் சேவை அமைப்பினர்! - ஈரோடு மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 5, 2024, 1:21 PM IST
ஈரோடு: சித்தோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிவதாகவும், அப்பெண்ணிடம் சமூக விரோதிகள் சிலர் தகாத முறையில் நடந்து கொள்ள முயல்வதாகவும் அப்பகுதி மக்கள் சித்தோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சித்தோடு காவல்துறையினர், ஆதரவற்றவர்களை மீட்கும் தனியார் சேவை நிறுவனமான அட்சயம் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில், சித்தோடு எஸ்.வி.என் பள்ளி அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, தொண்டு நிறுவனத்தினரின் வாகனத்தில் ஏற மறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் செய்து, தங்களது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக அறக்கட்டளை அமைப்பினர் கூறும் போது, “மீட்கப்பட்ட இளம்பெண் தான் குறித்த தகவல்களை முன்னுக்குப் பின்பு முரணாகத் தெரிவித்தாக கூறினர். மேலும், சிகிச்சை அளித்து அவரை இயல்பான நிலைக்குக் கொண்டு வந்த பிறகு தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், ஊர் போன்ற முழுமையான தகவல்கள் தெரியவரும்” எனத் தெரிவித்தனர்.