பறவைக் காய்ச்சல் எதிரொலி; தமிழ்நாட்டு எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்! - BIRD FLU in Kerala - BIRD FLU IN KERALA
🎬 Watch Now: Feature Video
Published : Apr 20, 2024, 3:50 PM IST
கோயம்புத்தூர்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகளை அழித்து வருகின்றனர். மேலும், காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பறவாமல் இருக்க கேரள எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு - கேரளா எல்லையான கோவை அடுத்த வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடியில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு - கேரள மாநில எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச்சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத் துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்களைக் கொண்டு வரப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது.
இந்த இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில், எச்5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் ஏதும் கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.