காலையிலேயே மார்க்கெட்டுக்கு சென்று பிரச்சாரம்.. சாலையோர கடையில் தேநீர்.. சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விறுவிறு வாக்கு சேகரிப்பு! - mk stalin election campaign - MK STALIN ELECTION CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 30, 2024, 11:57 AM IST
சேலம்: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக முதலமைச்சர் நேற்று சேலத்திற்கு வருகை தந்தார்.
இந்நிலையில், இன்று காலை, சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, சேலத்தில் உள்ள முதல் அக்ரஹாரம், பெரிய கடைவீதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளர் செல்வகணபதியுடன் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.வாக்கு சேகரிப்பின் போது குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முதலமைச்சர் வருகையையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.