ராசாத்திபுரம் பாலமுருகன் கோயிலில் களைகட்டிய தெப்பத்தேர் திருவிழா - தை கிருத்திகை கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 21, 2024, 9:33 AM IST
ராணிப்பேட்டை: கீழ்விஷாரம் அடுத்த ராசாத்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு, 24ஆம் ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக நேற்று (ஜன.21) நடைபெற்றது. இதில் சுவாமி பாலமுருகனுக்கு காலையில் கணபதி ஹோமத்துடன் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், குங்குமம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரவு 7 மணி அளவில் ஸ்ரீ பாலமுருகனுக்கும் பல்வேறு வாசனை கலந்த மலர் மாலைகளால் அலங்கரித்து, தங்க ஆபரணங்களுடன் ரதத்தில் அமர்ந்தவாறு முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னர், கோயில் அருகே உள்ள பிரம்மாண்ட தெப்பக்குளத்தில், தெப்பத்தேரில் அமர வைத்து குளத்தை மூன்று முறை வலம் வந்து, மங்கல தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது சுவாமி தெப்பக்குளத்தின் உலா வரும் போது, 'அரோகரா.. அரோகரா..' எனப் பக்தி முழக்கங்களை எழுப்பினர்.