சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..! - Flooding at Suruli Falls - FLOODING AT SURULI FALLS
🎬 Watch Now: Feature Video
Published : Jul 28, 2024, 1:49 PM IST
தேனி: தேனி மாவட்டம், கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி, சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் குளித்துவிட்டு இங்கு உள்ள சுருளி ஆண்டவர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. ஆகவே, வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். அருவிப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்றும் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.