சின்ன வேளாங்கண்ணியில் அந்தோணியார் கொடியேற்று விழா.. மத பாகுபாடு இல்லாமல் பங்கேற்று கோலாகலம்! - Small Velankanni festival
🎬 Watch Now: Feature Video
Published : May 2, 2024, 2:58 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வீரக்குறிச்சி - சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்று விழா மற்றும் ஆலயத் திருப்பணிகள் தொடக்கவிழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
புனித அந்தோணியார் திருத்தலத்தின் புனரமைக்கப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க ஆலயம் ,மக்கள் பயன்பாட்டிற்காக தஞ்சாவூர் மறை மாவட்ட துணைத்தலைவர் பேரருள் தந்தை ஜான்ஜோசப் சுந்தரம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மறை மாவட்ட பரிபாலகர் பேரருள் தந்தை டாக்டர்.சகாயராஜ் ஆலயத் திருப்பணிகளை அர்ச்சித்து திறந்து வைத்தார். கொடியேற்றிய பிறகு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் வண்ணமயமான வான வேடிக்கைகள் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது, இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.