ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் - Srivilliputhur Andal - SRIVILLIPUTHUR ANDAL
🎬 Watch Now: Feature Video
Published : Mar 26, 2024, 7:53 AM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமர்சையாக நேற்று (மார்ச் 25) நடைபெற்றது.
ஆண்டாள் கோயில் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படும் ஆடிப்பூரத் தேரோட்டத்திற்கு அடுத்தபடியாக, முக்கியமாகக் கருதப்படுவது 'ஆண்டாள் - ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம்' தான். இந்நிலையில், இந்த வருடத்திற்கான திருக்கல்யாண திருவிழா கடந்த 8 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் 9வது நாளான பங்குனி உத்திரம் தினமான நேற்று ஆண்டாள் - ரெங்க மன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக, திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுச்சேலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு, 'கோவிந்தா..கோவிந்தா' என்ற கோஷம் முழங்க கோயில் அர்ச்சகர் சுதர்சன பட்டர் திருமாங்கல்யத்தை ஆண்டாளுக்கு அணிவித்தார். அதைத்தொடர்ந்து, ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கட்டாயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். ஆகையால் ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.