தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.. புதுக்கோட்டை அருகே வினோத வழிபாடு! - Veeralaksmi Amman Temple - VEERALAKSMI AMMAN TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 4, 2024, 1:36 PM IST
புதுக்கோட்டை: செல்லுகுடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சர்வ அலங்காரத்தில் வீரலட்சுமி அம்மன், செல்லாயி மற்றும் பேராயி ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்து நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தனர். அப்போது, பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
இதையடுத்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் முன்பு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை வரிசையாக அமர வைத்து, கோயில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் மீது பேய், பில்லி சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக பூசாரியிடம் சாட்டை அடியும் பெற்றுக் கொண்டனர். இதுபோன்ற வினோத வழிபாடு கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், தலையில் தேங்காய் உடைக்கும் போதும், சாட்டையடி வழிபாடு நடக்கும்போதும் பக்தர்கள் ஒருவருக்கு கூட இதுவரை காயம் ஏற்பட்டது கிடையாது என்பதும் இதன் சிறப்பு என்று பக்தர்கள் தெரிவித்தனர்.