விஷப்பாம்பு குட்டிகளால் கிராம மக்கள் அச்சம்; ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
தேனி: ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் வழியாக தெருக்களில் பாம்பு குட்டிகள் தொடர்ந்து வருகிறது. எனவே, விஷ பாம்பு குட்டிகளின் மூலமாக மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தின் கிழக்குதெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாகவே இப்பகுதிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் வழியாக வரும் பாம்பு குட்டிகளால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
வீடுகளுக்கு முன்பாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் வழியாக, பாம்புகள் வருவதாக தெரிவிக்கும் மக்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு உயிர் பயத்தோடு நான்கு நாட்களாக இருப்பதாக கூறுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம், ஆண்டிப்பட்டி காவல்துறை, தீயணைப்புதுறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கிராம மக்கள் விஷ பாம்புகுட்டிகளின் மூலம் தங்கள் பகுதி மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.