அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா; வெகு விமரிசையாக நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சி! - Arulmigu Arunachaleswarar Temple - ARULMIGU ARUNACHALESWARAR TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Sep 23, 2024, 12:09 PM IST
திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
அந்தவகையில், ஊர்காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 17 நாள்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள்.
இத்தகைய கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் வரும் டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று (செப்.23) அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு, கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்காக நடப்படும் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பஞ்ச முக தீப ஆராதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. இந்த விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.