சங்கீத மும்மூர்த்தி ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி! தஞ்சையில் கோலாகலம்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் தெலுங்கு மொழி கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் அறியச் செய்தவர். சத்குரு ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக் கரையில் 1847 ஆண்டில் முக்தி அடைந்தவர்.
அனைத்தும் ராமபிரான் என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு மொழி கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவரது புகழைப் போற்றும் வகையில் தஞ்சாவூரில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஜன. 27) தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவையாறு சகோதரர்கள் வெங்கடேசன், நரசிம்மன் மற்றும் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோரின் பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பாட்டு, வயலின், மிருதங்கம், முகர்சிங் வித்வான்கள், வித்வாஷினிகள் கலந்து கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனைகளான நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகங்களை ஒரே குரலில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தியாகராஜருக்கு சிறப்பு தீபாரதனை காட்டி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தியாக பிரம்ம சபா தலைவர் சீனிவாசன், செயலாளர் மெளலீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், இசை ரசிகர்கள் கலந்து கொண்டு இசையை கேட்டு ரசித்தனர்.