அமைச்சரின் காரை பார்த்து அழுத சிறுவன்..அன்பில் மகேஷ் செய்த நெகிழ்ச்சி செயல்!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இரவு தருமபுரியில் தங்கிய அவர் இன்று (வியாழக்கிழமை) பென்னாகரம் வட்டம் குள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது தந்தையுடன் பள்ளிக்கு வந்த சிறுவன் ஒருவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டார். இதனைப் பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவன் அருகில் சென்று ஏன் அழுகிறாய்? என கேட்டார். இதற்கு பதிலளித்த மாணவனின் தந்தை, "அமைச்சர் கார் மற்றும் போலீஸ் ஆகியவற்றை பார்த்து சிறுவன் பயந்து விட்டதாகக் கூறினார்.
இதனை கேட்ட சிரித்த அமைச்சர், மாணவனை பார்த்து நீங்களும் படித்து சம்பாதித்து கார் வாங்க வேண்டாமா? என தெரிவித்து அவரை சமாதானம் செய்து வைத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.