கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்
🎬 Watch Now: Feature Video
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தில், கடந்த 8ஆம் ஆண்டு மாசி மகப் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த மாசித் திருவிழா வருகின்ற 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், 8 நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா போன்றவை நடைபெற்றதைத் தொடர்ந்து, மாசி மாதம் 9 ஆம் நாள் திருவிழாவாக இன்று (பிப்.23) திருத்தேர் பவனி நடைபெற்றது.
இந்தத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேரை வடம் பிடித்து இழுத்துத் துவக்கி வைத்தார். அதன்பின்னர், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சோழிஸ்வரரை வணங்கிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 10ஆம் திருவிழாவான நாளை (பிப்.24) தீர்த்தவாரியும், பின்னர் சுவாமி வீதியுலாவும் நடைபெறவுள்ளது.
இந்த மாசி மகம் திருவிழாவானது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.