சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை, டிசம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, ஆன்லைன் ஆப் மூலமாக போதைப் பொருள்களை விற்பனை செய்ததாகக் கல்லூரி மாணவர்கள் 5 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஜெ.ஜெ நகர் போலீசார துக்ளக்கை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, துக்ளக் சார்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இந்த மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா? ஏன் தப்பு பண்ற?" - மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!
அந்த மனுவில், “தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும், நிபந்தனைகளை ஏற்கவும் தயாராக உள்ளோம்” எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை டிசம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.