ஹாயாக படுத்திருந்த சிறுத்தை..திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் அச்சம் - வைரலாகும் வீடியோ - leopard in Dhimbham
🎬 Watch Now: Feature Video
Published : Apr 8, 2024, 7:38 AM IST
ஹாயாக படுத்திருந்த சிறுத்தை..
ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை 3ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையோர தடுப்பு சுவர் மீது சிறுத்தை படுத்து ஓய்வு எடுத்துள்ளது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சத்தியமங்கலம் அடுத்த, 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியின் நடுவே, திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம்.
அந்த வகையில், நேற்று திம்பம் மலைப்பாதையின் 3ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புசுவர் மீது, சிறுத்தை ஒன்று படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்துள்ளது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, வாகனங்கள் வந்து நிற்பதைக் கூட கண்டு கொள்ளாமல், சிறுத்தை ஹாயாக படுத்திருந்தது. பின், வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது சிறுத்தை படுத்திருக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையறிந்த வனத்துறையினர், மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.