விடிய விடிய நடைபெற்ற கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - MADURAI CHITHIRAI FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Apr 25, 2024, 4:04 PM IST
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெற்ற கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை வைகை ஆற்றில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அன்று (ஏப்.23) இரவு தங்கினார்.
அதனை அடுத்து, வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்தருளி, நேற்று (ஏப்.24) வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் நடைபெற்ற மண்டூக முனிவர் சாப விமோசன நிகழ்வில் பங்கேற்றார். பிறகு, கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர், அங்கிருந்து ராமராயர் மண்டபம் நோக்கி புறப்பாடாகினார்.
நேற்று (ஏப்.24) இரவு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர், அங்கு நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் மச்சவதாரம், கூர்மவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், கிருஷ்ண அவதாரம், ராம அவதாரம் மற்றும் முத்தங்கி சேவை ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விடிய விடிய நடைபெற்ற இந்த தசாவதார நிகழ்ச்சியின் நிறைவாக, அதிகாலையில் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், அங்கிருந்து தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குப் புறப்பட்டார். இன்று (ஏப்.25) இரவு தல்லாகுளம் பகுதியில் நடைபெறும் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளிய பின்னர், சனிக்கிழமை காலை அழகர் மலை நோக்கி புறப்பாடு நடைபெறும்.