குன்னூரில் 5வது நாளாக எரியும் காட்டுத்தீ.. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் அருகே உள்ள ஃபாரஸ்ட் டேல் (Forest Dale) பகுதியில் தனியார் தோட்டத்தில் குப்பைகளை எரித்த போது ஏற்பட்ட தீ அருகில் உள்ள வனப்பகுதியில் பரவி, பெரும் காட்டுத் தீயாக மாறியது. அதனை கட்டுப்படுத்த கடந்த 5 நாட்களாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
இதனிடையே, தீயை கட்டுக்குள் கொண்டுவர சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, ரேலியா அணையிலிருந்து (Rallia dam) தண்ணீர் எடுத்து வந்து, தீ எரியும் பகுதியில் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை தொடர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அதற்காக, ரேலியா அணையிலிருந்து ஏழுமுறை தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீ எரிந்து கொண்டிருந்த இடத்தில் ஊற்றப்பட்டது. இதனை அடுத்து, சில இடங்களில் கட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீ பரவாமல் இருக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக காட்டுத்தீக்கு காரணமான தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலபாண்டியன் மற்றும் ஊழியர்கள் கருப்பையா (63), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்யப்பட்டு குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.