பஞ்சு மிட்டாய் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? தமிழ்நாட்டில் ஏன் அதற்குத் தடை? - Rhodamine B
🎬 Watch Now: Feature Video
Published : Feb 17, 2024, 10:46 PM IST
தருமபுரி: வாயில் வைத்ததுமே பஞ்சு,பஞ்சாய் கரைந்து போகும் இந்த பஞ்சு மிட்டாய்களில், ரோடமின் பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
பலருக்கும் பிடித்தமான பஞ்சுமிட்டாய், கோயில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், பூங்காக்கள், என எங்கும் சென்றாலும் பரவலாகக் கிடைத்த இந்த மிட்டாய் பிரபலம் ஆனதற்குக் காரணமே அதன் தித்திப்பு சுவைதான். அதாவது, சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பஞ்சு மிட்டாய் இயந்திரத்தில் கொட்டுவார்கள். உள்ளிருக்கும் வெப்பம் + வேகமான சுழற்சியினால், சர்க்கரை உருகத் துவங்கும்.
உருகும் சர்க்கரையானது, நுண்ணிய இழைகளாக உருமாறத் துவங்கும். காற்றுடன் சேர்த்து அவை வெளியேறும்போது, கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், நாவிற்கு ருசியாகவும் நம்முடைய கைக்கு வந்து சேர்கிறது. இந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்த பஞ்சுமிட்டாயில் ரோடமின் பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவை வெளியிட்டிருந்தார்.
இந்த உத்தரவு பஞ்சு மிட்டாய் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்கள் நலன் கருதி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் திருவிழாவில் பொதுமக்கள் உற்சாகமாகப் பஞ்சு மிட்டாய்களை வாங்கி சுவைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட இந்த காணொளி. பஞ்சு மிட்டாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த மக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்படுகிறது.