கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை.. தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்! - heavy rain in kadambur hills - HEAVY RAIN IN KADAMBUR HILLS
🎬 Watch Now: Feature Video
Published : May 15, 2024, 10:43 PM IST
ஈரோடு: தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த நிலையில், கோடையைக் குளிர்விக்கும் விதமாக பருவமழையானது தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வருகிறது.
அந்த வகையில், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (மே 15) மாலை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குரும்பூர், அரிகியம், மொசலு மடுவு, குன்றி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஓடைகளிலிருந்து வந்த வெள்ளநீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து, கடம்பூர் அணைக்கரை பள்ளத்தில் கலந்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளநீர் அணைக்கரை தரைப்பாலத்தை மூழ்கடித்தபடிச் சென்றது. அப்போது, ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் வெள்ள நீரைக் கடந்து சென்றனர். நீண்ட நாட்கள் கழித்து பலத்த மழை பெய்த நிலையில், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைக் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.