தஞ்சாவூரில் நூதன முறையில் வாக்கு சேகரித்த திமுக, பாஜக வேட்பாளர்கள்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video


Published : Apr 16, 2024, 10:53 PM IST
தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் வாக்காளர்களைக் கவர பல்வேறு நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, புதிய பேருந்து நிலையம் சாலையில் உள்ள சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். முரசொலி நடைப்பயிற்சி செய்தவாறு மைதானத்தைச் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார்.
மேலும் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்களும் முரசொலியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து யோகா பயிற்சி செய்து கொண்டு இருந்தவர்களுடன் சேர்ந்து தானும் யோகா செய்து வாக்கு சேகரித்தார்.
அதே போல் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் மதுக்கூர் பகுதியில் படப்பைக்காடு, பெரமையா கோயில், கீழக்குறிச்சி, ஓலையக்குன்னம், பெரிய கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது புலவஞ்சி கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தார். இது கிராம மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பின்னர் பொதுமக்கள் வேட்பாளர் முருகானந்தத்தை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.