“இப்போ வருமோ.. எப்போ வருமோ..” அன்னதானத்திற்கு வெகுநேரம் காத்திருந்த பக்தர்கள் எழுந்து சென்றதால் பரபரப்பு!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 23, 2024, 11:17 AM IST
கோயம்புத்தூர்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (ஜன.22) துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணி அளவில் துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாசாணி அம்மன் கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களை அன்னதானக் கூடத்துக்கு வரவழைத்து, அங்கு அனைவரையும் மாலை 4.30 மணி முதல் அமர வைத்து, அவர்களுக்கு தலை வாழை இலை, தண்ணீர் பாட்டில் போன்றவை வைக்கப்பட்டன.
பக்தர்களும் உணவு கிடைக்கும் என எதிர்பார்த்து நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கும் நிகழ்வு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நீடித்ததால், உணவு அருந்த வந்த பக்தர்கள் சிலர் தூங்கி வழிந்தும், செல்போன் பார்த்தபடியும் அமர்ந்திருந்தனர்.
மேலும் சிலர் பந்தியிலிருந்து பாதியிலேயே எழுந்து சென்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அமர முயற்சி செய்தபோதும், பக்தர்கள் சமாதானத்திற்கு கட்டுப்படாமல் எழுந்து சென்றதால் பரபரப்பு நிலவியது. இறுதியில் கடைசியாக இருந்த பக்தர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.