ஆணைகுளத்தம்மன் மரத்தேர் திருவிழா; உப்பு, மிளகு, பழங்களை தேரின் மீது வீசி மக்கள் நேர்த்திகடன்! - Anaikulathamman Chariot Festival
🎬 Watch Now: Feature Video
Published : Mar 2, 2024, 6:33 PM IST
வேலூர்: ஆணைகுளத்தம்மன் மரத்தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உப்பு, மிளகு, பழங்கள் ஆகியவற்றை தேரின் மீது வீசி நேர்த்திகடனை செலுத்தி வழிபட்டனர்.
வேலூர் மாவட்டப் பகுதியில், ஆணைகுளத்தம்மன் மரத்தேர் விழா இன்று (மார்ச் 2) கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து, வேலப்பாடியில் உள்ள ஆணைகுளத்தம்மன் மற்றும் படவேட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை, தேரில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நிலையில், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் கலந்துகொண்டு, மக்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.
இதையடுத்து, நேர்த்திகடனைச் செலுத்தும் வகையில், பொதுமக்கள் உப்பு, மிளகு, சில்லரை காசுகள், பழங்கள், பூக்கள் ஆகியவைகளை தேரின் மீது வீசி நேர்த்திகடனைச் செலுத்தி பக்தி பரவசத்தில் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி முழக்கங்கள் எழுப்பி வழிபாடு செய்தனர். இந்நிலையில், தேர் மூன்று நாட்கள் வேலப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றிவரும் என கூறப்பட்டது. இந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமி வழிபாடு நடத்தி, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.