குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் அம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம்! - Gangai amman temple Sirasu festival - GANGAI AMMAN TEMPLE SIRASU FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : May 14, 2024, 3:43 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 15 நாட்களாக கோயிலில் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அதிகாலை அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலம் தொடங்கியது.
என்.ஜி.செட்டித் தெரு, காந்தி ரோடு, நடுப்பேட்டை, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், திரளான மக்கள் கலந்து கொண்டு கெளண்டன்ய மகாநதிக் கரையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலை அடைந்தனர். இந்த ஊர்வலத்தின்போது, பக்தர்கள் சிதறுகாய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
ஊர்வலத்தில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான கோலாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், வாள் வீச்சு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. கோயிலில் உள்ள மண்டபத்தில், அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, சிறப்பு பூஜைகளுப் பின் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பலர் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.