'ஸ்வீட்டு எனது சகோதரர் ஸ்டாலினுக்காக..' - மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிச் சென்ற ராகுல் காந்தி - Rahul Gandhi - RAHUL GANDHI
🎬 Watch Now: Feature Video
Published : Apr 13, 2024, 8:32 AM IST
கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டிற்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்தார். இதன் ஒருபகுதியாக, கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தியும் பங்கேற்றிருந்தார்.
இதற்காக, கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல்காந்தி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து காரில் சிங்காநல்லூர் சென்றார். அங்கு காரை நிறுத்திய அவர், சாலை தடுப்புச் சுவரை உற்சாகத்துடன் தாண்டி குதித்து, சாலையோரம் அமைந்திருந்த ஸ்வீட் கடைக்குச் சென்று, ஸ்வீட் வாங்கினார். அப்போது, யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்டதற்கு, 'எனது சகோதரர் ஸ்டாலினுக்காக' எனக் கூறினார்.
அப்போது, அவர் சில ஸ்வீட்களை சுவைத்து பார்த்துவிட்டு, பிடித்த ஸ்வீட்களை வாங்கியதைக் கண்ட ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, ஸ்வீட் கடையிலிருந்து புறப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு முதலமைச்சரை சந்தித்ததும், தான் வாங்கிய ஸ்வீட்களை வழங்கினார். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.