திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேர்த்திருவிழா விமரிசை! - thirukadaiyur Temple car festival - THIRUKADAIYUR TEMPLE CAR FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Apr 21, 2024, 10:20 PM IST
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ளது. இங்கு சிவபெருமான், கால சம்கார மூர்த்தியாக எழுந்தருளி, மார்க்கண்டேயனுக்காக எமனை சம்காரம் செய்ததால், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இந்தக் கோயில் திகழ்ந்து வருகிறது.
தேவாரப் பாடல் பெற்ற இந்தக் கோயிலின் சித்திரை வசந்த உற்சவம், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் நாள் திருவிழாவான இன்று (ஏப்.21), தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, கோயிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்கார மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளச் செய்து, சிறப்புப் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார சுவாமிகள் முன்னிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்தத் தேரானது, நான்கு மாட வீதிகளையும் சுற்றி வளம் வந்து நிலையை அடைந்தது. மேலும், இந்த சித்திரை தேர்த் திருவிழாவில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மற்றும் வெளி மாநில பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.