தூத்துக்குடியில் களைக்கட்டிய ரேக்ளா ரேஸ்.. சீறிப்பாய்ந்த காளைகள்..!
🎬 Watch Now: Feature Video
Published : Feb 4, 2024, 9:20 PM IST
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் போன்ற விழாக்களின் போது கிரமப்புரங்களில் நடைபெறும் ரேக்ளா ரேஸ் என்று அழைக்கப்படும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயம் மிகவும் சிறப்புப் பெற்றது.
அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் புத்தூர் கிரமத்தில் மாட்டு வண்டி ரேக்ளா பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பந்தய வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த போட்டியில், தூத்துக்குடி மாவட்டம் மட்டும் அல்லாது அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பந்தய வீரர்கள் தங்களது காளைகளுடன் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் கே.கடம்பூர் ராஜு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கொடியசைத்து பந்தயம் துவங்கியதைத் தொடர்ந்து, பந்தய வீரர்கள் மாட்டு வண்டிகளை இயக்க காளைகள் ஒன்றுக் கொன்று முந்திக்கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. மேலும், சாலையின் இருபுறமும் நின்று போட்டியைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள் போட்டியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, பந்தய எல்லைகளை வந்தடைந்த முதல் மூன்று மாட்டு வண்டிகளின் வீரர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.