சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கோலாகலம்! - Chidambaram Aani Thirumanjanam - CHIDAMBARAM AANI THIRUMANJANAM
🎬 Watch Now: Feature Video
Published : Jul 12, 2024, 9:45 PM IST
கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூலை 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடந்த நிலையில், இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்து, சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பின் பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்தனர். பின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும், நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடியதைப் பார்த்து, பக்தர்கள் சிவ சிவ என முழக்கமிட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.