திருப்புடைமருதூரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 63 நாயன்மார்கள் வீதி உலா.. பணிகள் மும்முரம்! - 63 Nayanmargal Festival - 63 NAYANMARGAL FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 11, 2024, 6:35 PM IST
திருநெல்வேலி: திருப்புடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு 63 நாயன்மார்களின் வீதி உலா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
திருநெல்வேலி முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சாய்ந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு தைப்பூசம், ஆனி உத்திரம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருஷாபிஷேக விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு, 40 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்த 63 நாயன்மார்கள் வீதியுலா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதனால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் பாரத உழவார பணிக்குழு செயலாளர் ரெங்கநாதன், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 12 பக்தர்கள் 63 நாயன்மார்கள் சிலையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீதியுலாவிற்கு தேவையான புதிய சப்பரங்கள் தயாரித்தல், பழைய சப்பரங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்புடைமருதூர் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் செயல் அலுவலர் பாரதி ஆகியோர் செய்து வருகின்றனர்.