இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடல் போன்களுக்கு அரசு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் புதிய தயாரிப்புகளை வாங்குவதற்கும், விற்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு இந்த தடை பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது. மீறி இவற்றைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரான குற்றமாகக் கருதப்படும் எனத் தொழில்துறை அமைச்சர் அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா (Industry Minister Agus Gumiwang Kartasasmita) தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட ஆப்பிள் கேட்ஜெட்டுகளின் பட்டியலில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ரோ மாடல்களுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், யாரேனும் இவற்றை பயன்படுத்தவோ, விற்பனை செய்வதையோ மக்கள் பார்த்தால், உடனடியாக புகார் அளிக்கலாம் எனவும் அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா கூறியுள்ளார்.
IMEI இல்லை:
இது தொடர்பாக பேசிய அமைச்சர், இந்த போன்களுக்கு நாட்டில் செயல்பட சர்வதேச மொபைல் கருவி அடையாள (IMEI) சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்தார். முக்கியமாக, ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தோனேசியாவில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இதுவரை பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆப்பிள் இந்தோனேசியா தளத்திலும் இந்த போன் விற்பனைக்கான பட்டியல் இடம்பெறவில்லை. புதிய மாடல் ஐபோன்கள் ஆன்லைன் ஷாப்பிங் விற்பனை பட்டியலில் இடம்பெறாததால், அரசு விதித்த தடை அமலாக்கப்பட்டதை நினைத்து ஆப்பிள் பயனர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க |
ஏன் ஐபோன் 16 தடை செய்யப்பட்டது?
ஆப்பிள் நிறுவனம் முதலீட்டு வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யாததால் தான், அதன் ஐபோன் 16 மற்றும் பிற புதிய மாடல்களுக்கு அரசு தடை விதித்ததாக அகஸ் குமிவாங் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 1.71 டிரில்லியன் ரூபியா (109 மில்லியன் டாலர்) முதலீடு செய்யும் என உறுதியளித்திருக்கிறது.
அதில் நிறுவனம் 1.48 டிரில்லியன் ரூபியா (95 மில்லியன் டாலர்) மட்டுமே முதலீடு செய்துள்ளது. இதனால் 230 பில்லியன் ரூபியா (14.75 மில்லியன் டாலர்) குறைவான முதலீட்டை மேற்கொண்டதால், அரசுக்கு சுமூகமான சூழல் நிலவவில்லை. இதனால், தொழில்துறை அமைச்சகம் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தேவையான அனுமதிகளை வழங்கவில்லை என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதில் உள்ளூர் சேவைக்கான TKDN சான்றிதழ் வழங்கப்படாததும் அடங்கும்.
இந்த சான்றிதழ், இந்தோனேசியாவில் விற்கப்படும் வெளிநாட்டு சாதனங்களுக்கு 40 விழுக்காடு உள்ளூர் கண்டென்டுகள் அவசியம் என்பதை உறுதி செய்வதாகும். மேலும், நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நிறுவும் நிறுவனங்கள் இதை கடைபிடிப்பது அத்தியாவசியமாகும். இந்தோனேசிய அரசின் இந்த செயல்பாடுகள், ஆப்பிள் ஐபோன் 16 விற்பனையில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.