டிராய் (TRAI), இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவைகளின் ஒழுங்குமுறை ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், குறுஞ்செய்திகள் (SMS), ஓடிபி (OTP) வாயிலாக மேற்கொள்ளப்படும் சைபர் மோசடிகளைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை டிராய் விதித்தது. இது நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்திருந்த நிலையில், சேவைகளில் தொய்வு ஏற்படும் என நிறுவனங்கள் விடுத்த எச்சரிக்கையின் காரணமாக, டிசம்பர் 1 வரை தற்போது காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாம் எப்போதும் இணையத்துடன் தொடர்பில் இருக்கும் இந்த காலத்தில், பெரும்பாலானப் பயனர்கள் சைபர் மோசடிகளுக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்க டிராய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, போலி குறுஞ்செய்திகளைத் தடுக்கவும், ஓடிபிக்களை பாதுகாக்கவும், உள்வரும் குறுஞ்செய்திகளின் அடையாளங்களைப் பகுப்பாய்வு செய்யவும் டிராய் முடிவெடுத்தது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு:
இதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், குறுஞ்செய்தி வாயிலாக சேவை வழங்கும் நிறுவனங்கள், ஓடிபி அனுப்பும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும் என டிராய் உத்தரவிட்டது. அதன்படி, பயனர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் அனைத்தும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சர்வர்களில் இணைக்கப்பட்டு, பின்னர் பகுப்பாய்வு செய்த பின் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும்.
இதனால், நிறுவனங்கள் அளித்துவரும் வேகமான சேவைகள் தடைபடும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய்-யிடம் முறையிட்டது. இதனை ஏற்றுக்கொண்டு, நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஓடிபி ஸ்கேனிங்’ செயல்பாட்டை அமல்படுத்த, டிசம்பர் 1 வரை காலநீட்டிப்பு வழங்கி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க |
அதென்ன ஓடிபி ஸ்கேனிங்:
இப்போது பெருமளவு மோசடிகள் மொபைல் போன் வாயிலாக நடக்கிறது. இதனைத் தடுக்க அரசு பல வழிமுறைகளை மேற்கொண்டு வந்தாலும், புதிய வழிகளில் மோசடிகள் தொடர்கிறது. இதனைத் தடுக்கும் விதமாகவும், தேவையில்லாத விளம்பர குறுஞ்செய்திகளைத் தடுப்பதற்காகவும் (Spam SMS Filter), டிராய் ஒரு பெரும் முயற்சியை எடுத்துள்ளது.
அந்தவகையில், ஒரு மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது ஓடிபி-யை அனுப்பும் நிறுவனம், தங்கள் அடையாளத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பதிவுசெய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, பயனர் மொபைல்களுக்கு வரும் குறுஞ்செய்திகளோ அல்லது ஓடிபிகளோ தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சர்வர்களில் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னர், பயனர் மொபைல்களுக்கு அனுப்பப்படும். இதனால், செல்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறையும் என டிராய் நம்புகிறது.
ஒருபுறம் மொபைல் சந்தாதாரர்களுக்கு இது பயனளிக்கும் வகையில் இருந்தாலும், அனைத்து குறுஞ்செய்திகளும் பகுப்பாய்வு செய்யும்பட்சத்தில், பயனர் தனியுரிமை பறிக்கப்படும் சூழல் ஏற்படுமா என்ற அச்சமும் மறுபுறம் நிலவுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.