நிலவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில், உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேறி வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலத்தின், 'விக்ரம் லேண்டர்' (Vikaram lander) தென் துருவத்தில் தரை இறங்கியது. இதில் இருக்கும் 'பிரக்ஞான் ரோவர்' (Pragyan rover) ஆய்வு மேற்கொண்டதில் 160 கிலோமீட்டர் அகலம் உள்ள பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரக்ஞான் ரோவர் அனுப்பிய தரவுகளின்படி, சந்திரனில் உள்ள பழமையான புவியியல் அமைப்புகளில் ஒன்று, தென் துருவ-எட்கென் படுகையில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோவர் 350 கிலோமீட்டர் தொலைவில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது தான், பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகளவில் உள்ள விண்வெளி ஆய்வாளர்களை இந்த தகவல் உற்சாகப்படுத்தியுள்ளது.
பிரக்ஞான் ரோவரின் உயர் ஆப்டிகல் தெளிவுத்திறன் கொண்ட கேமராவால் எடுக்கப்பட்ட சந்திர மேற்பரப்பில் உள்ள பண்டைய பள்ளங்களின் புகைப்படங்கள், புவியியல் வரலாற்றிற்கு முக்கியமான தடயங்களை வழங்கக்கூடும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சந்திரனின் தென் துருவத்தில் நீர் மற்றும் பிற தாதுக்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு வித்திடும் வகையில், பிரக்ஞான் ரோவர் அனுப்பிய புதிய தகவல்கள் உள்ளன.
பிரக்ஞான் ரோவர்:
மொத்தம் ஆறு சக்கரங்கள், 27 கிலோ எடையுடன் கூடிய பிரக்ஞான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கி ரிமோட் காரைப் போல அங்கும், இங்கும் வலம் வந்து ஆய்வு மேற்கொண்டது. நிலாவின் தரைப்பரப்பில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில், அங்குள்ள பொருள்களை ஆய்வு செய்துகொண்டு தரவுகளை சேகரித்துக் கொண்டே நகரும்.
மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை இஸ்ரோவுக்கு அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும். இதன் வாயிலாக, சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடானது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: