தார்வாட் (கர்நாடகம்): ஈக்கள் இப்போது விண்வெளிக்கு பறக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (UAS) உயிரி தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள 'டிரோசோபிலா மெலனோகாஸ்டர்' (Drosophila Melanogaster) என்ற அறிவியல் பெயர் கொண்ட பழ ஈக்கள், 2025ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரோவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ககனாயன்' (Gaganayaan) திட்டத்தின் பரிசோதனை ஒன்றில் பயன்படுத்தப்பட உள்ளது.
சிறுநீரக கற்கள் என்பது விண்வெளி வீரர்களிடையே பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். ஆகவே, விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள் பிரச்சனை குறித்தும், விண்வெளியில் சிறுநீரக கற்கள் உருவாகும்போது மூலக்கூறு வழிமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்கு, 15 ஈக்கள் கொண்ட ஒரு தொகுப்பை 'ககனாயன்' விண்கலத்தின் மூலமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யுஏஎஸ் பயோடெக்னாலஜி துறையின் உதவி பேராசிரியர் ரவி குமார் ஹோசாமணி கூறுகையில், "இந்த பரிசோதனையானது, குறிப்பாக இந்திய விண்வெளி வீரர்களுக்கு புதுமையான சிகிச்சைகளை கண்டறிய பயனுள்ளதாக இருக்கும். இதற்காக அனுப்பப்படும் ஈக்கள் உள்ள கிட்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு அதன் உள்ளே ரவை மற்றும் வெல்லம் கலந்த கஞ்சி வடிவில் தயாரிக்கப்பட்ட உணவும் வைக்கப்படும்.
மேலும், நாங்கள் ஈக்களுக்கு சோடியம் ஆக்சலேட் (NaOx), எத்தில் கிளைகோல் (EG) மற்றும் ஹைட்ராக்ஸி எல் புரோலைன் (HLP) ஆகியவற்றை உணவாக அளிப்போம். இந்த நிலையில், 3 முதல் 4 நாட்களுக்குள் ஈக்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக்கும். முதன்முதலில், யுஏஎஸ் விஞ்ஞானிகள் இஸ்ரோவுடன் கைகோர்த்து வானூர்தி ஆய்வுத் துறையில் பரிசோதனை செய்யவுள்ளனர்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து யுஏஎஸ் அதிபர் முனைவர் பி.எல்.பாட்டீல் பேசுகையில், "2025ஆம் ஆண்டில் 'ககனாயன்' விண்வெளிக்கு அனுப்பலாம். எனவே, அதற்கு முன்னதாகவே நாம் தயாராக வேண்டும். விண்வெளிப் பயணங்களின் போது இதுவரையில் 30 தடவைகளுக்கு மேல் விண்வெளி வீரர்களுக்கு சிறுநீரக கற்கள் உண்டானதாக பல அறிக்கைகள் கூறுகின்றனர். எனவே, இந்த சோதனை தேவையான ஒன்று. சிறுநீரக கற்கள் உருவாகும் செயல்முறையை ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய முடிந்தால், நமது விண்வெளி வீரர்களை இந்த பாதிப்பில் இருந்து காப்பாற்றி, அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?