வாட்ஸ்ஆப் (WhatsApp) மெசேஜிங் செயலி புதிய அம்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்துவதன் வாயிலாக தனது வாடிக்கையாளர்களை எங்கும் சிதறவிடாமல் அணைத்து வைத்திருக்கிறது. இப்போது, வாட்ஸ்ஆப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அரட்டைகளை (சாட்களை) நம் விருப்பப்படி வெவ்வேறு பட்டியல்களாக பிரித்து பயன்படுத்த அனுமதிக்கிறது.
இப்படி அரட்டைகளைப் பிரித்துப் பயன்படுத்துவதன் வாயிலாக, தேவையான அரட்டைகளை எளிதாகக் கண்டறிவது சாத்தியமாகிறது. பயனர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்த இந்த சேவையை, தற்போது மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது சில பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. விரைவில், இது அனைத்து பயனர்களுக்கும் அப்டேட் வாயிலாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரட்டைகளைப் பட்டியலிடுவது எப்படி?

நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியைத் திறந்தவுடன், அனைத்தும், படிக்காத, பிடித்தவை மற்றும் குழுக்கள் விருப்பங்களைக் காண முடியும். ஆனால் இப்போது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள் மற்றும் சக ஊழியர்களின் அரட்டைகளை தனித்தனியாக பட்டியலிட புதிய அம்சம் உங்களை அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சத்தின் வாயிலாக கூடுதலாகவும் தேவையானப் பட்டியல்களை உருவாக்க முடியும் என்பது தான் சிறப்புமிக்கதாகப் பார்க்கப்படுகிறது.
அன்புக்குரியவரின் அரட்டைக்கு 'பிடித்தவை' பட்டியல், குழுக்களுக்கான 'குழு' பட்டியல் மற்றும் நண்பர்களுக்கான 'நண்பர்கள்' பட்டியலும் உள்ளன. நீங்கள் கூடுதல் விருப்பங்களைச் சேர்க்க விரும்பினால், கீழ்வரும் படிகளைப் பின்பற்றவும்.
- வலதுபுறத்தில் உள்ள '+' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- '+' ஐகானின் உதவியுடன், உங்கள் விருப்பப்படி குடும்பம், அலுவலகம் மற்றும் நண்பர்களின் புதிய பட்டியல்களை உருவாக்கலாம்.
- பட்டியலிடப்பட்டவற்றை ஃபில்டர்கள் வாயிலாகவும் அணுக முடியும்
இதையும் படிங்க |
புதிய அம்சம் எப்போது கிடைக்கும்?

மெட்டா தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சக்கர்பெர்க் தனது வாட்ஸ்ஆப் சேனலில், இந்த புதிய அம்சம் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாக அறிவித்தார். இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் தான் வீடியோ அழைப்புகளுக்கான புதிய ஃபில்டர் அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது.
தொடர்ச்சியாக நிறுவனம் கொண்டு வரும் புதிய புதுப்பிப்புகள் மக்களை கவரும் விதமாகவும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் இருப்பதால், வாட்ஸ்ஆப் பயனர்கள் எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.