சென்னை: நிலா என்றாலே நியாபகம் வருவது பாட்டி வடை சுடும் கதை, அதேபோல், நிலா நிலா ஓடி வா என்று சிறுவயதில் அம்மா பாட்டுப்பாடி ஊட்டிவிட்ட நாட்கள் என்றும் நினைவில் இருந்து நீங்காதவையாகும். இவ்வாறு பல கதைகளுக்கும், இரவு நேர பொழுதுகளுக்கும் துணையாக இருக்கும் நிலாவின் கதை பற்றி இன்று சர்வேதேச நிலா தினத்தன்று (ஜூலை 20) தெரிந்து கொள்ளவது அவசியமாகிறது. அடடா உனக்கு பின்னாள் இத்தனை வரலாறா? என நிலா பற்றிய வியக்கவைக்கும் தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.
நிலாவில் கால்தடம் பதித்த மனிதன்: அமெரிக்காவின் 'நாசா' 1969 ஜூலை 16ஆம் தேதி அனுப்பிய 'அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்குச் சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். இந்நிலையில், இந்த விண்கலம் ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. விண்கலத்தில் இறங்கி நிலவில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார். இத்தினத்தை உலக நிலவு தினமாக ஐநா சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.
அண்டத்தில் தோன்றிய அதிசயம்: சூரியன், பூமி போன்றவை உருவாவதற்கு 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, சூரியக் குடும்பம் இருந்த பகுதியில் பல்வேறு அளவுகளில் விண்கற்கள் இருந்தன. அந்த விண்கற்கள் தாறுமாறாக அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தன. அவற்றில் சில விண்கற்கள் மிகச் சிறியனவாக இருந்தாலும், ஒரு சில விண்கற்கள் செவ்வாய் கோளின் அளவுக்குப் பெரிதாக இருந்தன. அந்த பெரியவகை விண்கற்கள் தியா என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்பட்டது.
பூமி மீது மோதிய விண்கல்: இந்நிலையில், இந்த பெரிய வகை விண்கற்களுள் ஒன்று பூமி மீது மோதியது. அந்த மோதலில் உருவானதுதான் நிலா. நிலாவை இயற்கை செயற்கைக்கோள் எனச் சொல்லாம். இந்த மோதலில் நிலா மற்றும் பூமி சுக்குநூறாகிவிடாமல் வெப்பத்தில் உருகிய நிலையில் இரண்டாகப் பிளந்த காரணத்தால் பூமியும், நிலாவும் ஆக்ஸிஜன் உள்ள கோளாக வலம் வருகிறது. இவ்வாறு அதிசய அறிவியல் விண் விபத்தில் தோன்றியதுதான் நிலா. இதனால் தான் பூமியும், நிலாவும் வடிவத்தில் ஒன்று போல் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நிபுணர் கூறும் அறிவியல் கதை: ஆனால் சூரியன், பூமி ஆகியவை தோன்றி 6 கோடி ஆண்டுகள் கழித்தே, இந்த நிகழ்வு நடந்திருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. ஏனென்றால், இன்று இருப்பது போல் திட நிலையில் பூமி அப்போது இல்லை, திரவ நிலையில் பாகு போல்தான் தோன்றியது என்கிறார் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன்.
மேலும், நிலா குறித்து பல சுவாரஸ்ய கருத்துகளை லெனின் தமிழ்க்கோவன் ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், “பூமியில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், பூமியைத் தாண்டி மனிதன் வாழ்வதற்கு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா என்று ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டன, அப்போது முதலாவதாக நாம் சோதனை செய்தது நிலவைத்தான். இந்நிலையில், நமது இந்தியாவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நிலா இப்படித்தான் இருக்கும்: இதன் மூலமாக ஏற்கனவே நாம் நிலா குறித்து அறிந்திருக்கும் தகவலான நிலாவில் காற்று மண்டலம் மிக மிகக் குறைவு, அங்கு ஆக்சிஜன் சுத்தமாக இல்லை, ஹைட்ரஜன், நியான், ஆர்கான் போன்ற எளிய வாயுக்களே உள்ளன. மேலும், அங்கு மனிதன் வாழ முடியாது. அதேபோல், ஈர்ப்பு விசையும் பூமியை ஒப்பிடுகையில் 6இல் 1 பங்கு தான் உள்ளது என நாம் கேள்விபட்டிருப்போம்.
ஆனால், அவற்றை இனி இந்தியாவின் சந்திராயன் ஆய்வு மேற்கொண்டு சரித்திரம் படைக்க வாய்ப்புள்ளது. மனிதன் பூமியில் 60 கிலோ இருந்தால் நிலாவில் 10 கிலோ தான் இருக்க முடியும். மேலும், நிலாவில் வெப்பநிலை என்பது பகல் நேரத்தில் 160 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உள்ள நிலையில், இரவு நேரத்தில் -127 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் உள்ளது.
மனிதர்கள் நிலாவில் குடியேறலாமா? இதனால் சாதாரணமாக நிலவில் கவச உடை இல்லாமல் இருக்க முடியாது. அண்மையில் நிலவில் குகைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு மனிதர்கள் வாழ வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். நமது சிறுவயதில் நிலவில் பாட்டி வடை சுடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விபட்டிருப்போம்.
அதெல்லாம் நிலவில் உள்ள மேடு பள்ளங்கள் ஆகும். அவை சில மீட்டர் ஆழத்திலும் பல கிலோ மீட்டர் ஆழத்திலும் உள்ளன. தற்போது வரைக்கும் சந்திரயான் 3லிருந்து புது புது தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. மேலும், ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. எனவே, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களுக்காக காத்திருக்கிறோம்." என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: முதல் ஹாலோ சுற்றுவட்டபாதையை நிறைவு செய்த ஆதித்யா எல்1- இதுவரை கொடுத்த தகவல்கள் என்னென்ன?