சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐடிபிஐ - ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் லேப் (I2SSL) ஆய்வகத்தை ஐடிபிஐ வங்கியின் தலைமைச் செயல் அலுவலரும் மேலாண் இயக்குநருமான ராகேஷ் சர்மா தொடங்கி வைத்தார்.
இந்த துவக்க விழாவில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஐடிபிஐ வங்கியின் தலைமைப் பொது மேலாளர் சௌமியா சவுத்ரி, ஐடிபிஐ தலைமைப் பொது மேலாளரும் பிராந்தியத் தலைமை அதிகாரியுமான மஞ்சுநாத் பை, சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சக்நூலா, சென்னை ஐஐடி-ன் ஐடிபிஐ - ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் (I2SSL) ஆய்வக முதன்மை ஆய்வாளர் செஸ்டர் ரெபீரோ மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வகம் தொடர்பாக சென்னை ஐஐடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இணைய இணைப்பு, ஆட்டோமேஷன் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியோடு வங்கி, நிதி மற்றும் காப்பீடு, போக்குவரத்து, அரசு, மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொலைத்தொடர்பு, உத்தி சார் மற்றும் பொது நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் யாவும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களையே கணிசமாக நம்பியுள்ளன. இதன் காரணமாக ஹேக்கர்கள் உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்த அதிக வாய்ப்புள்ளது.
வங்கித் துறை, மோட்டார் வாகனங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் அமைப்புகளில் உள்ள இணையப் பாதுகாப்பில் இந்த ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. அத்துடன் சோதனை மதிப்பீடு, மதிப்பீட்டுப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான பரிசோதனை நிகழ்வுகளை உருவாக்குவதுடன், பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு தற்போது உள்ள இணையப் பாதுகாப்பு அபாயங்களை நிர்வகிக்க நிறுவன அமைப்புகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
இதுமட்டும் அல்லாது, சைபர் பாதுகாப்பு குறித்து பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு தளத்தை அமைக்கும் வகையிலும், ஆன்லைன் இளநிலைப் பட்டப்படிப்புகள், ஹேக்கத்தான், ரகசிய குறியீடுகளை அமைத்தல் (capture the flags -CTF), ப்ராஜெக்ட்கள் போன்றவற்றுக்கும் உதவும் வகையிலும் இந்த ஆய்வகம் செயல்படும்.
ஹார்டுவேர் ஃபயர்வால்கள், பாயின்ட்-ஆஃப்-சேல் சாதனங்கள், மொபைல் பேங்கிங் போன்ற முக்கியமான பயன்பாடுகளுக்கான அமைப்புகளை மிகக் கவனமாக வடிவமைக்க சென்னை ஐஐடி-ன் ஐடிபிஐ - ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் லேப் (I2SSL) ஆய்வகம் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, "நம் நாட்டு பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் முக்கிய தகவல் உள்கட்டமைப்பான நிதித் துறை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது.
இதுபோன்ற அமைப்புகளுக்கு ஏற்படும் சைபர் அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக கவனித்து செயல்திறன் மிக்க பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். ஆகவே, சென்னை ஐஐடி மற்றும் ஐடிபிஐ வங்கியின் இந்த கூட்டு முயற்சி மிகச் சரியான நேரத்தில் உருவாகியுள்ளது. சைபர் பாதுகாப்பு சவால்களுக்கு விரிவான தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்" என கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா, "சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடியுடன் கூட்டுச் சேர்ந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. இணைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே எதிர்த்துப் போராடுவதற்கும், தரவு மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஐடிபிஐ வங்கியின் உறுதிப்பாட்டிற்கு இந்த முயற்சி சான்றாக அமைந்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்புடன்கூடிய சூழலை உருவாக்க முயல்கிறோம். சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்குதல், அடையாளம் காணுதல், நடுநிலையாக்குதல் என திறனை மேம்படுத்தும் வகையில் அனைவரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரீல்ஸ் பிரியர்களுக்கு அரசின் அசத்தல் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!