சீன நிறுவனமான ஹுவாவே பல புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அந்நாட்டுச் சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது. தற்போது, அடுத்தக்கட்ட நகர்வாக மூன்று மடிப்புடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் சீன சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் (Huawei Mate XT Ultimate) ஸ்மார்ட்போனை நிறுவனம் வெளியிட்டு டெக் சந்தையை திணறடித்துள்ளது.
மொத்தமாக போனைத் திறந்தால் பெரிய 10.2 இன்ச் திரை இருக்கிறது. இதனுடன் நிறுவனம் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் கூடிய மூன்று பின்பக்க கேமராவையும் இணைத்துள்ளது. ஒரு டேப்லெட் கணினிக்கு இணையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை திறன்பட இயக்க பெரிய 5,600mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் விலை (Huawei Mate XT Ultimate Price):
ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலான 16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை சீனாவில் CNY 19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 35,000 ரூபாய் ஆகும். முறையே இதன் 512ஜிபி ஸ்டோரேஜ் வகை CNY 21,999 (தோராயமாக ரூ. 2,59,500) ஆகவும், 1டிபி ஸ்டோரேஜ் வகை CNY 23,999 (தோராயமாக ரூ. 2,83,100) ஆகவும் நிறுவன வர்த்தகத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதிய ஹுவாவே டிரிப்பிள் ஃபோல்டு மொபைல் ஆனது டார்க் பிளாக், ரூய் ரெட் என இரு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போனை பயனர்கள் ஹுவாவே வி-மால் (Huawei Vmall) இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த மூன்று மடிப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் அம்சங்கள் (Huawei Mate XT Ultimate Specification):
Huawei Mate XT அல்டிமேட் ஸ்மார்ட்போனை முழுவதுமாகத் திறந்தால் 3,184x2,232 பிக்சல்கள் கொண்ட நெகிழ்வான 10.2 இன்ச் எல்டிபிஓ (LTPO) OLED தொடுதிரையைக் கொண்டுள்ளது. இதை ஒருமுறை மடித்தால் 7.9-இன்ச் திரையாக மாறும். மேலும் முழுவதுமாக மடித்தால் முகப்புத் திரையாக 6.4-இன்ச் திரை கிடைக்கும்.
இரட்டை நானோ சிம் இணைப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஹார்மோனி-ஓஎஸ் 4.2 (HarmonyOS 4.2) நிறுவப்பட்டுள்ளது. ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் ஸ்மார்ட்போனின் சிப்செட் விவரம் குறித்து நிறுவனம் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்றாலும், இவை 16ஜிபி ரேம் ஆதரவுடனும், 256ஜிபி, 512ஜிபி, 1டிபி ஆகிய மெமரி தேர்வுடனும் கிடைக்கிறது.
ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் கேமரா (Huawei Mate XT Ultimate Camera):
பின்பக்கம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் கேமராவுடன், 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சாரும், 12 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சாரும் 5.5x ஆப்டிகல் ஜூம் திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பிற இணைப்பு அம்சங்களைப் பொருத்தவரை 5ஜி, வைஃபை-6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், NFC, யுஎஸ்பி 3.1 டைப்-சி ஆகியவை அடங்கும். பயோமெட்ரிக் சென்சார் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5,600mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 66W சார்ஜிங் ஆதரவும், 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. முகப்புத் திரையைப் பயன்படுத்தும்போது போனின் அளவு 156.7x73x12.8மிமீ ஆகவும், டிரிப்பிள் ஸ்கிரீன் பயன்பாட்டின் போது இதன் அளவு 156.7x219x3.6மிமீ ஆகவும் இருக்கிறது. மொத்த ஹுவாவே மேட் எக்ஸ்.டி அல்டிமேட் போனின் எடை 298 கிராமாக உள்ளது.