கடன் வாங்கிப் படிக்க வேண்டும், கடன் வாங்கி திருமணம் நடத்த வேண்டும், இல்லையேல் கடன் வாங்கி ஒரு வீட்டையாவது கட்டி விடவேண்டும் என்ற எண்ணம் தான் இங்கு மக்களிடம் பிரதிபலித்திருந்தது. ஆனால், இப்போதைய நிலையே வேறு! 'ஒரு ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) எப்படியாவது வாங்கணும்,' என்ற ஆசை தான் பல இளசுகளின் ஆழ்மனதில் கிடந்து ஏங்கிக் கொண்டிருக்கிறது.
நான் சமீபத்தில் சந்தித்த பலரும், ’ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக காசு சேர்க்கிறேன்’ என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். அப்படி என்னதான் பிரத்யேக அம்சங்கள் என ஆராய்ந்தால், நிறுவனத்தின் இயங்குதளமான ஐஓஎஸ் மட்டுமே பிரத்யேகமானதாக இருக்கிறதேத் தவிர, பெரும்பாலான உதிரிபாகங்கள் அனைத்தையும் பிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது தெரியவந்தது. முதலில், திரை, அதாவது டிஸ்ப்ளேயில் இருந்துத் தொடங்கலாம்.
ஐபோன் டிஸ்ப்ளே:
உலகளவில், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், கேட்ஜெட்டுகள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலானவற்றின் எல்இடி திரை வகைகளை சாம்சங், எல்ஜி, BOE போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஐபோனில் பயன்படுத்தப்படும், பெரும்பாலான OLED டிஸ்ப்ளேக்கள் சாம்சங் நிறுவனத்தால் (Samsung Company) உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக எல்ஜி நிறுவனம் வழங்குகிறது. மிகவும் குறைந்த அளவில் சீனாவின் BOE நிறுவனம் ஐபோனுக்காக OLED திரைகளைத் தயாரிக்கின்றன எனக் கூறப்படுகிறது.
ஐபோன் கேமரா:
பல வருடங்களாக ஐபோன் கேமராக்களை ஜப்பானிய நிறுவனமான சோனி தயாரித்து வழங்குகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக சோனி நிறுவனத்தின் கேமரா சென்சாரைத் தான் ஆப்பிள் தங்கள் ஐபோன்களில் பயன்படுத்துகிறது. தற்போது, 48 மெகாபிக்சல் சென்சார்களை சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் காலங்களில், சாம்சங் நிறுவன கேமரா சென்சார்களும் ஐபோன்களின் இடம்பெறும் என்பதை இதன் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இதையும் படிங்க |
ஐபோன் சிப்செட்:
இதையும் ஒரு தைவான் நிறுவனத்திடமிருந்து தான் ஆப்பிள் வாங்குகிறது. தைவான் அரசின் பெரும் பங்குடன் இயங்கும் தைவான் செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான டிஎஸ்எம்சி (TSMC), ஆப்பிள் ஐபோன்களுக்கான சிப்செட்டுகளைத் தயாரிக்கிறது. இதன் வடிவமைப்பை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிக் கொடுக்கிறது. அதன்படி, சிப்செட்டுகள் தைவானில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஐபோன் பேட்டரி:
இந்தியாவில் ஐபோன் பேட்டரிகளை ஜப்பானிய நிறுவனமான டிடிகே (TDK) தயாரித்து வருகிறது. இவர்கள் ஐபோனுக்கான லித்தியம்-அயன் (Lithium-ion) பேட்டரிகளை தயாரிக்கின்றனர். இந்த பேட்டரிகளை ஐபோன்களில் நிறுவதற்காக ஜெர்மானிய டெசா (TESA) நிறுவனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஐபோன் அசெம்ப்ளி:
இந்தியாவில், இதுபோன்ற உதிரிபாகங்கள் கொண்டுவரப்பட்டு, அதை முழு ஐபோன் வடிவில் கொடுப்பது, ஃபாக்ஸ்கான் (Foxconn), விஸ்ட்ரான் (Wistron) ஆகிய நிறுவனங்கள் தான். இங்குதான் ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டு, விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
இதர நெட்வொர்க் உதிரிபாகங்கள்:
ஆண்ட்ராய்டு போன்களின் சிப்செட் அரசனாக வலம்வரும் ஸ்னாப்டிராகனின் தாய் நிறுவனமான குவால்காம் தான் வைஃபை இணைப்புகள் போன்றவற்றுக்கான உதிரிபாகங்களை ஆப்பிள் ஐபோன்களுக்கு வழங்குகிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இப்படி தான் உருவாக்கப்படுகிறது. அதன், உதிரிபாகங்கள் வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதனால், இந்த போன் தான் எலீட் என்று கூறி, தேவையற்ற பண விரயத்தை ஏற்படுத்துவது சரியான முடிவாக இருக்காது. ஆப்பிள் ஐபோன்கள் தேவை இருப்பின், அதனை வாங்கிப் பயன்படுத்தலாம். பல பயனர்களை ஈர்த்துள்ள அதன் சிறந்த கேமரா தரம், மாற்றுக்கருத்துகள் இன்றி அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.