ஹைதராபாத் / தெலங்கானா: சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர், 84 வயதுடைய முதியவருக்கு ரூ.53 லட்சம் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுத்து உதவி செய்துள்ளனர். ஆனால், அவர் சைபர் மோசடியில் சிக்கி இழந்தது மொத்தம் ரூ.2.88 கோடி என்கிறது ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை.
இது ஒரு தொடர் கதை போலத் தெரிந்தாலும், தனிநபரிடம் ஆயிரம், லட்ச ரூபாய் என இருந்த சைபர் மோசடிகள், இப்போது கோடிக்கணக்கை எட்டியுள்ளது ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்க தோன்றுகிறது. இதே சைபர் காவல்துறையினரும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். தெரியாத நபர்கள் மிரட்டினாலோ, கைது செய்வோம் என்று அச்சுறுத்தினாலோ உடனடியாக சைபர் காவல்துறையை அணுக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெளிச்சத்துக்கு வந்த மோசடி:
இந்த வழக்குத் தொடர்பாக சில தகவல்களை பகிர்ந்துள்ள ஹைதராபாத் காவல் ஆணையர் சி.வி. ஆனந்த், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தி இருக்கிறார். முதியவரிடம் 68 கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளீர்கள், நாங்கள் தேசியக் குற்றப்பிரிவு காவல்துறையில் (சிபிஐ) இருந்து அழைக்கிறோம் என்று சைபர் குற்றவாளிகள் தெரிவித்ததாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குற்றவாளிகள் இவரை கைது செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர் என்றும், அப்படி நடக்காமல் இருக்க உடனடியாக ரூ.2.88 கோடியை இந்தந்த வங்கி கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் பதற்றத்தைக் கிளப்பியுள்ளனர் என்றவர், முதியவர் பயத்தில் சைபர் குற்றவாளிகள் கேட்ட பணத்தை உடனடியாக அந்தந்த வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றியதாகவும் தெரிவித்தார்.
இந்த மோசடியில் சிக்கி, தன்னுடைய வாழ்நாளில் போராடி சேர்த்த பணத்தை இழந்த துயரத்துடன், முதியவர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் ஐடி சட்டத்தின் 66(சி), 66(டி) மற்றும் 308(2), 318(4), 319(2), 336(3), 338, 340(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சற்றே ஆறுதல்:
சைபர் குற்றப் பிரிவு உடனடியாக விசாரணையைத் தொடங்கி, மோசடிக்கு ஆளான வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை மேற்கொண்டது. காவல்துறை அலுவலர்கள், முதியவருக்கு வழிகாட்டி, நிதியை திரும்பப் பெற நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யச் செய்தனர்.
விசாரணையில் அதிரடி காட்டிய காவல்துறை, குற்றவாளிகளை கையாண்டதுடன், வங்கிகளை தொடர்பில் வைத்திருந்து ரூ.53 லட்சத்தை முதியவரின் வங்கி கணக்குக்கு திரும்ப அனுப்ப வழிவகை செய்துள்ளனர். ஆக்சிஸ் வங்கி சூரத் கிளை ரூ.53 லட்சமும், கேரள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.50 லட்சமும் பாதிக்கப்பட்டவருக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில், ஆக்சிஸ் வங்கி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தொகையை பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க |
காவல் ஆணையர் கோரிக்கை:
Beware of Digital arrest scam!!!
— Cyber Crime Wing - Tamil Nadu (@tncybercrimeoff) October 16, 2024
To Report Cyber Crimes-Dial 1930 or register at https://t.co/B5dVcu5jFb #tncybercrimewing #tncybercrimeoff #cyberalert #FedExscam #digitalarrestscam pic.twitter.com/XyEvb1fvJh
கைது செய்யப்படுவோம் என்ற மிரட்டல் அழைப்புகளுக்கு மக்கள் பயப்பட வேண்டாம் என்று ஹைதராபாத் காவல் ஆணையர் கூறியுள்ளார். காவல்துறையினர் ஒருபோதும் இதுபோன்ற அழைப்புகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மோசடி செய்பவர்கள் தான் இப்படி அழைப்பு விடுக்கிறார்கள் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றவர், இதுபோன்ற மோசடி செய்பவர்களுக்கு ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும், அத்தகைய அழைப்புகளை உடனடியாக முடக்கி, 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு அழைத்தோ அல்லது தேசிய சைபர் கிரைம் இணையதளத்தை அணுகி புகாரை பதிவுசெய்யவும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற இணைய மோசடிகளைக் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வைப் பெற, சைபர் கிரைம் காவல்துறையின் சமூக வலைத்தளப் பக்கங்களை மக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். மோசடி குறித்து உடனடியாக புகார் அளித்தால், இழந்த தொகையை திரும்பப்பெறும் வாய்ப்பு அதிகமுள்ளது எனவும் கூறியவர், மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.