ஐதராபாத்: ஆசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், உலக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் அனல் பறக்கிறது.
தேர்தல் பரப்புரை, வித விதமான வாக்குறுதிகள், எதிர்க் கட்சியினர் மேல் விமர்சனம் என்ற வரிசையில் செயற்கை நுண்ணறிவு பிரதான இடத்தை பிடித்து வட்டமடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் களம் காணும் கட்சிகள், வெற்றி வாகை சூட அனைத்து விதமான யுக்திகளை பயன்படுத்தி வரும் வேலையில், டீப்ஃபேக், வாய்ஸ் குளோனிங் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பல சர்ச்சைகளையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் தடம் பிடித்து அசுர வளர்ச்சியில் அடைந்து வருவது ஒரு புறம் இருந்தாலும், டீப்ஃபேக் போன்றவற்றால் எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படும் விதமாக இருப்பதாக பலர் எச்சரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
தேர்தல் சமயத்தில் பல போலி செய்திகள், வீடியோக்கள், ஆடியோக்கள் என ஏஐ தொழிநுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. முன்னதாக, வங்கதேசத்தில் எதிர்கட்சியினரான ரூமின் பர்ஹானா நீச்சல் உடையில் இருப்பது போலவும், நிபுன் ராய் நீச்சல் குளத்தில் இருப்பது போலவும் டீப்ஃபேக் வீடியோக்கள் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுவது போல வாய்ஸ் குளோனிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆடியோ ஒன்று வெளியானது.
அந்த வகையில், வார்த்தை போர் நிறைந்த களமாக இருக்கும் தமிழ்நாடு அரசியல் களத்தில் விமர்சனங்களும், பதிலுக்கு பதில் வார்த்தை பேட்டிகளும் நடைபெற்று வரும் நிலையில், மறைந்த ஆளுமைகளை தேர்தல் பரப்புரையில் களம் இறக்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறது அதிமுக, திமுக. அதன்படி, மறைந்த ஆளுமைகள் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களை AI தளத்தில் சந்தித்து வருகின்றனர்.
இன்டர்நெட் பிரச்சாரம்: ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் வழக்கம் தற்போது தலையோங்கி நிற்கிறது. வேட்பாளர்கள் என்ன பேசுகின்றனர், எங்கு பிரச்சரம் மேற்கொள்கின்றனர் என்பதை உடனடியாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரியப்படுத்தி பொதுமக்களின் கவனத்தை பெற முயற்சி செய்து வருகின்றனர்.
தன் கட்சியின் செயல்பாடுகளை வெளிப்படுத்தி தனக்கு சாதகமாகவும், எதிர் கட்சியினர் குறித்து மீம்ஸ், வீடியோ என உருவாக்கி வெளியிடுவதையும் காணமுடிகிறது. இந்த விளம்பரங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைந்து, அவர்கள் மத்தியில் ஒரு உரையாடலை துவக்கி வைக்கிறது என சொன்னால் மிகையில்லை.
அதுமட்டுமல்லாமல், குறிப்பாக தேர்தலின் போது, மத்தியில் இருக்கும் கட்சிகள் மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்சாரங்களில் ஈடுபடும் போது மொழி இடையூராக இருக்கும். அதற்கு தீர்வாக ஒருவரது பேச்சு அவ்வப்போது மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கவும் ஏஐ சாதகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் - பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய உரையாடலில், மோடி இந்தியில் பேசுவது, ஏஐ உதவியுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது
தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை: போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கண்டறித்து விரைவாக பதிலளிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் வெளியாகும் போலி செய்திகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசால் நோடல் ஏஜென்சி என்ற அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போலிச் செய்திகள் மற்றும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்களை விரைந்து அடையாளம் காண்பது அவசியம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல்களில் குழப்பத்தையும், தொழில்நுட்பப் பயன்பாடு, சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளையும் பரப்பும் ஆபத்தை ஏஐ ஏற்படுத்தி வருதவாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.