டெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கப்பட்டதை அடுத்து 300 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிடுள்ள விலைப் பட்டியலின் படி இறக்குமதி செய்யப்படும் ஐபோன் ப்ரோ மாடல் செல்போன்கள் 5 ஆயிரத்து 100 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதற்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் செல்போனை 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தது.
தற்போது இறக்குமதி வரி குறைப்பு காரணமாக 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 15 ப்ரோ செல்போன் 3 புள்ளி 7 சதவீதம் விலை குறைந்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் செல்போன் 10 சதவீதம் விலை குறைந்து 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் உள்நாட்டு தயாரிப்புகளான ஐபோன் 13, 14 மற்றும் 15 மாடல் செல்போன்களும் 300 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் iPhone SE மாடல் செல்போன்கள் 49 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து 47 ஆயிரத்து 600 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்கள் மற்றும் சார்ஜர்கள் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க அரசு முன்மொழிந்த ஒரு வாரத்தில் இந்த விலை மாற்றங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீரென முடங்கிய வோடபோன் நெட்வொர்க்! - vodafone idea network down