சென்னை: சென்னையை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி ஸ்டார்ட் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ், சென்னை ஐஐடியுடன் இணைந்து சிறிய ரக ராக்கெட் ஏவுதல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதல் தளத்தில் முதல் முறையாக தனியார் ராக்கெட் ஏவுதல் தளம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் 3டி பிரின்டட் செமி கிரியோஜெனிக் ராக்கெட்டான அக்னிபான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இதுவரை செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தியராத நிலையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் இந்தியாவிலேயே முதல் முறையாக செமி கிரியோஜெனிக் என்ஜினை கொண்டு இயங்கும் Agnibaan SOrTeD என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
கடந்த, 2017ஆம் ஆண்டு சென்னை ஐஐடியை சேர்ந்த இரண்டு இளம் இன்ஜினியர்களால் துவங்கப்பட்ட அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சிங்கில் பீஸ் 3டி பிரின்டட் செமி கிரியோஜெனிக் ராக்கெட்டான Agnibaan SOrTeD-ஐ உருவாக்கி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் நான்கு முறை கைவிடப்பட்ட நிலையில், 5வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான்கு முறை தொடர்ந்து ராக்கெட் சோதனை கைவிடப்பட்டதை அடுத்து இன்று (மே.30) காலை 7 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள தனியார் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
இரண்டு அடுக்கு ஏவுதல் திறன் கொண்ட இந்த ராக்கெட் 300 கிலோ எடையும் 700 கிலோ மீட்டர் தூரம் பயனிக்கக் கூடிய திறன் கொண்டது. திரவ மற்றும் வாயுவு எரிபொருளை கொண்டு செமி கிரியோஜெனிக் என்ஜின் மூலம் இந்த ராக்கெட் இயங்குகிறது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், Agnibaan SoRTed-01 mission வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செமி கிரியோஜெனிக் என்ஜின் மூலம் இயங்கும் நாட்டின் முதல் 3டி பிரின்டட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
மேலும் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில், "அக்னிபான் SoRTed-01 சோதனை ஏவூர்தியை வெற்றிகரமாக செலுத்திய அக்னிகுல் காஸ்மோஸ் முழு குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செமி-கிரையோஜெனிக் திரவ எஞ்சின் கொண்ட முதல்-கட்டுப்படுத்தப்பட்ட ராக்கெட்டின் உற்பத்தி குறிப்பிடத்தக்கதாகும். இந்த மைல்கல் சாதனை நமது இளைஞர்களின் நம்பிக்கை, கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளின் புதிய விடியலைப் பிரதிபலிக்கின்றன மற்றும் நமது தேசத்தை வளர்ச்சியடைந்த பாரதம் ஆக மாற்றும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரின் உண்மையான உணர்வின் உருவகமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் தலைவிரித்தாடும் ஃபெடெக்ஸ் கூரியர் மோசடி.. சைபர் குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? - FedEx Courier Fraud