தேனி: தமிழக காவல்துறை பெண் அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்த வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி, அவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முன்னதாக யூடியூபர் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து மதுரை நீதிமன்றத்தில் இருந்து, தேனி அடுத்த பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்பில் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கரிடம் கஞ்சா வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கு குறித்த விசாரணையை தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரிடம் காவல் துறை விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசாரும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை அடுத்து கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
மேலும், மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, போலீசார் விசாரணை கோருவதால், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன் பின்னர் சவுக்கு சங்கரை காவலில் எடுக்க நீதிபதி உத்தரவி பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்கும் ரயில்வே அதிகாரியின் டிராஸ்பர் ஆர்டர் ரத்து!