சேலம்: சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி கிராமப் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி நேற்று முன்தினம் (ஏப்.14) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது பொதுமக்கள் மத்தியில், திமுக அரசின் சாதனைகளைக் கூறியும், மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தும் அவர் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அந்த கூட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடித்து கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு வந்தார்.
மேலும் தனது, இரண்டு கைகளிலும் பாம்பைப் பிடித்து விளையாடிக் கொண்டு பிரச்சாரம் நடந்த பகுதியில் சுற்றித்திரிந்தார் அந்த இளைஞர். இதனைக் கண்ட அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த இளைஞரை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஆனால், அந்த இளைஞர் பிரச்சாரம் முடியும் வரை அந்த பகுதியிலேயே சுற்றிச் சுற்றி வந்தார். திமுக வேட்பாளர் செல்வகணபதி தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகுதான் இளைஞரும் அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அறிந்த சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த அந்த இளைஞரைக் கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில், பாம்புடன் பிரச்சார கூட்டத்திற்கு வந்த இளைஞர் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அந்த இளைஞர் அரவிந்த் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது சேலம் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெசவாளர் வீட்டில் பட்டுச்சேலை நெய்தல்.. மாடு வண்டி ஊர்வலம் என அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பா.ம.க வேட்பாளர்!