திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - பேச்சியம்மாள் தம்பதியர். இவர்களது மகன் விக்டர் (21) நாகர்கோவிலில் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பேச்சியம்மாளின் உடன்பிறந்த தம்பியான காசி, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், தாய்மாமன் காசியின் 17 -வயதான மகளும், விக்டரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காசியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று விக்டர் அவரது முறை பெண்ணான 17 வயது காதலியை சந்திக்க பாப்பாக்குடி வந்துள்ளார்.
பின்னர் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இதனை பார்த்த சிலர் காசியிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காசி மற்றும் அவரது மகன் தங்க செல்வன் இருவரும் சேர்ந்து அரிவாளால் விக்டரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேய துடிதுடித்து விக்டர் உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சென்ற பப்பாக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காசி, அவரது மகன் தங்க செல்வன் (19) உள்ளிட்டோரை பப்பாக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விசாரணையில் விக்டர் கடந்தாண்டு அந்த சிறுமியை அழைத்து சென்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக வெளியே வந்தது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து!