சென்னை: சென்னை மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீர் வெளியேற்றத்துக்காக மெட்ரோ குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இந்த குழாய்களை மொத்தமாக இணைக்கும் வகையில், 20 அடி அகலம் மற்றும் 8 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இந்த தொட்டி திறந்தே இருந்த நிலையில், சமீபத்தில் தொட்டியின் பாதி பகுதியை மட்டும் இரும்பு தகரத்தை வைத்து மறைத்துள்ளனர். இருப்பினும், பாதி தொட்டி திறந்த வண்ணம் இருந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னால் தொட்டியை மூடும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இக்கழிவுநீர் தொட்டியில் சரண்ராஜ்(30) என்ற இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சரண்ராஜ் வானகரம் மீன் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
முன்னதாக, சரண்ராஜ் உடல் கழிவுநீர் தொட்டியில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி, விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, சடலமாக மீட்கப்பட்ட சரண்ராஜின் உடலில் சிறு காயங்கள் இருப்பதால், அவர் தவறுதலாக தொட்டியில் விழுந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தொட்டியில் வீசினார்களா? என பலகோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.